பதிவு செய்த நாள்
07
மார்
2020
12:03
பள்ளிப்பட்டு: கொள்ளாபுரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, இஸ்லாமியர்கள், பழங்கள் மற்றும் மலர் மாலைகளை, சீர்வரிசையாக எடுத்து வந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பஸ் நிலையம் அருகே, கொள்ளாபுரியம்மன் கோவில் உள்ளது.பழமையான இந்த கோவிலில், ஜாத்திரை உற்சவம் விமரிசையாக கொண்டாடப் படுவது வழக்கம். ஆறு மாதங்களாக, கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.இப்பணிகள் நிறைவடைந்த நிலையில், நேற்று காலை, 8:00 மணிக்கு, கும்பாபிஷேகம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, உற்சவர் அம்மன், வீதியுலா எழுந்தருளினார். கும்பாபிஷேகத்தை ஒட்டி, பள்ளிப்பட்டு நகரில் வசிக்கும் இஸ்லாமியர்கள், நேற்று முன்தினம் மாலை, பூமாலைகள் மற்றும் பழ வகைகளை ஊர்வலமாக எடுத்து வந்து, அம்மனுக்கு சீர்வரிசை நடத்தினர். பல்வேறு சமுதாயத்தினர் வசிக்கும் பள்ளிப்பட்டு நகரில், இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்களின் இந்த நல்லிணக்கம், தற்போதைய சமயத்தில் பெரிதும் வரவேற்கப்பட்டது.