பதிவு செய்த நாள்
08
மார்
2020
01:03
வேலுார்: குடியாத்தம் அருகே, நுாற்றாண்டுகள் பழமையான சிவன் ஆலயத்தில், மரகத லிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் பரவியதால், வருவாய் துறை அதிகாரிகள், அங்கு ஆய்வு நடத்தினர்.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பெரும்பாடி மூங்கப்பட்டில், நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த சிவன் ஆலயம் உள்ளது. இங்கு, சதுர வடிவில் அடிப்பாகத்துடன் கூடிய, லிங்கம் அமைந்துள்ளது. இது, தற்போது பராமரிப்பின்றி முட்புதர் மண்டி கிடக்கிறது. இக்கோவிலில் பழங்கால சிற்பக்கலையுடன் கூடிய துாண்கள் மற்றும் கற்சிலைகள் உள்ளன. இந்த கோவிலின் அருகே, சிதிலமடைந்துள்ள நிலையில், குளம் ஒன்று உள்ளது. இங்குள்ள நந்தி பகவான் சிலையும் சேதமடைந்துள்ளது. இவற்றை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நிலையில், அங்கு புதியதாக மரகத சிலைகள் கண்டெடுக்கப்பட்டதாக, தகவல் பரவியதால், வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு ஏற்கனவே இருந்த, கல்லால் ஆன லிங்கம் மட்டுமே இருந்துள்ளது. பொதுமக்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, மரகத சிலை என்பது வெறும் வதந்தி என்பது தெரியவந்தது.இந்நிலையில், சிதிலமடைந்துள்ள இந்த ஆலயத்தை பராமரித்து சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள், அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.