பதிவு செய்த நாள்
08
மார்
2020
01:03
தஞ்சாவூர்: தஞ்சாவூரில், 600 ஆண்டு பழமையான ஜெயின் கோவிலில் திருடப்பட்ட, 22 சிலைகளை, போலீசார் மீட்டனர்.
இது தொடர்பாக, நான்கு பேரை கைது செய்தனர்.தஞ்சாவூர், கரந்தை, ஜைன முதலி தெருவில், 600 ஆண்டுகள் பழமையான, ஆதீஸ்வரர் என்ற ஜெயின் கோவில் உள்ளது. ஜன., 19ம் தேதி, இக்கோவிலில் இருந்த, ஐம்பொன்னால் ஆன ஆதீஸ்வரர், தீர்த்தங்கர், சரஸ்வதி உட்பட, 22 சிலைகளை, மர்ம நபர்களால் திருடி சென்றனர்.இது தொடர்பாக, போலீசார், தனிப்படை அமைத்து, சிலை திருடர்களை தேடி வந்தனர். தஞ்சை, சுங்கான் திடலைச் சேர்ந்த ராஜேஷ், 40, என்பவரை, கைது செய்து விசாரித்தனர்.அவர் கொடுத்த தகவலின்படி, கரந்தையை சேர்ந்த சண்முகராஜன், 45, சுங்கான் திடலை சேர்ந்த ரவி, 45, நாகை, கீவலுாரை சேர்ந்த விஜயகோபால், 37, ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.ராஜேஷ் வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 22 சிலைகளையும், போலீசார் மீட்டனர். திருட்டு நடந்து, 48 நாட்களில், சிலைகளை மீட்ட போலீசாரை, பொதுமக்கள் பாராட்டினர்.