சிவகங்கை:சிவகங்கை கவுரி விநாயகர் கோயில் எதிரேயுள்ள தெப்பக்குளத்தில் மாசி தெப்பத்திருவிழா நடைபெற்றது. சிவகங்கை தெப்பக்குளத்தில் வைகை ஆற்று நீர் நிரம்பியுள்ளதால், அதில் முதல் முறையாக தெப்ப உற்ஸவம் நடத்த விழாக்குழுவினர் முடிவு செய்தனர். நேற்று இரவு 7:00 மணிக்கு சிவன்கோயிலில் இருந்து சிறப்பு அபிஷேகம் செய்த புனித நீரை எடுத்து வந்து, சிவகங்கை தெப்பக்குளத்தில் அபிஷேகம் செய்தனர். பொற்றாமரை மீது வீற்றிருந்த கங்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, தெப்பத்தில் தீபம் ஏற்றி வழிபட்டனர். அமைச்சர் பாஸ்கரன் தலைமை வகித்தார். எம்.ஜி.ஆர்., மன்ற மாநில துணை செயலாளர் கருணாகரன், கோட்டாட்சியர் சிந்து, தாசில்தார் மயிலாவதி, சிவன்கோயில் கண்காணிப்பாளர் வேல்முருகன் உட்பட ஏராளமான பக்தர்கள் தெப்பக்குள சுற்றுச்சுவரில் தீபம் ஏற்றி வழிபட்டனர். பின்னர் கங்கை அம்மன் வீதி உலா வந்தார். பெண்கள் தெப்பக்குளத்தை சுற்றிலும் ஆயிரக்கணக்கான விளக்குகளை ஏற்றினர். முதலமாண்டு விழா என்பதால், பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.