ரிஷிவந்தியம்;மையனுார் வைகுண்டநாதர் பெருமாள் கோவிலில் மாசி மகத்தையொட்டி தீர்த்தவாரி நிகழ்ச்சி நேற்று நடந்தது. ரிஷிவந்தியம் அடுத்த மையனுார் கருடமலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வைகுண்டநாதர் பெருமாள் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இக்கோவிலில் மாசி மகத்தன்று தீர்த்தவாரி நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெறும். அதேபோல் இந்தாண்டு மாசி மகத்தையொட்டி நேற்று முன்தினம் இரவு திருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் உள்ள உற்சவர் அரங்கநாத பெருமாள் சுவாமியை பல்லக்கில் வைத்து பக்தர்கள் தோளில் சுமந்தவாறு 20 கி.மீ., தொலைவில் உள்ள மையனுார் கோவிலுக்கு நடந்து சென்றனர். தொடர்ந்து கருட நதியில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. ரங்கநாத பட்டாச்சாரியார் தலைமையிலான குருக்கள் பூஜைகளை செய்தனர். இதில் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.