திருக்கோஷ்டியூர் தெப்ப உற்சவம்: விளக்கு ஏற்றி வழிபட்ட பெண்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மார் 2020 10:03
திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியா நாராயண பெருமாள் கோயில் தெப்ப உற்சவ விழாவில் குளத்தில் கரையில் பெண்கள் விளக்கு ஏற்றி வழிப்பட்டனர்.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் தெப்பஉற்ஸவம் பிப்.,29ல் துவங்கியது. நேற்று 9ம் திருநாளை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு பெருமாள் குழந்தை கிருஷ்ணராக வெண்ணெய்த்தாழி சேவை அலங்காரத்தில் திருவீதி புறப்பட்டார். கோயிலிலிருந்து தெப்பம் நோக்கி புறப்பாடு துவங்கியது.தொடர்ந்து தெப்பக்குளத்தில் எழுந்தருளி தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடந்தது. குளத்தைச் சுற்றித் திரளாக பக்தர்கள் கூடி தரிசித்தனர். பின்னர் தெப்பம் மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளினார். பக்தர்கள் தொடர்ந்து சுவாமி தரிசனம்செய்தனர். இதே போன்று கோயிலில் நேற்று அதிகாலை முதல் நடை திறந்து பக்தர்கள் தரிசனம் துவங்கியது. மூலவர் சயனக் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சிறப்புத் தரிசனத்தில் பக்தர்கள் அவதி: திருக்கோஷ்டியூர் கோயிலில் பெருமாளை தரிசிக்க பலரும் ரூ.25 கட்டணம் செலுத்தி வரிசையில் நின்றனர். கோயிலைச் சுற்றி நின்ற இந்த வரிசையில் நிழற் கூடம் இல்லாததால் பக்தர்கள் 5 மணி நேரம் வெயிலில் காத்திருந்து தரிசனம் செய்தனர். அதே சமயம் வழக்கம் போல பொதுத்தரிசனத்திற்கான வரிசையில் கூட்டம் இல்லை. பலரும் பொதுத் தரிசனம் என்று நினைத்து சிறப்புத் தரிசனத்தில் சென்றனர். குளத்தைச் சுற்றிலும் பெண்கள் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். கொளுத்தும் வெயிலிலும் பெண்கள் கூட்டம் குறையவில்லை. தெப்ப மண்டபத்திற்கு எதிரில்விளக்கேற்றிய பெண் சல்வாரில் தீப்பிடிக்க அவரே அதை அணைத்து விட்டதால் பாதிப்பில்லை. அதிகமான தீபங்கள் ஏற்றப்பட்டதால் வானில் மேகம்போல கரும்புகை திரண்டது. கோயில் நிர்வாகம்குளத்தில் எண்ணெய் விளக்கு, மஞ்சள் பை போடும் எந்த ஐ தீகமும் இல்லை என்று அறிவித்தும் வழக்கம் போல் பக்தர்கள் குளத்தில் பிளாஸ்டிக் டப்பாக்கள், பைகள் என்று வீசினர். பஸ்கள் நிற்கும் பஸ் ஸ்டாண்ட் வசதி சரியாக இல்லாததால் அரசு பஸ்கள் அதில் செல்வதில் குளறுபடியானது. திருப்புத்துார் ரோட்டில் வழக்கம் போல கார் பார்க்கிங் மற்றும்பஸ் ஸ்டாண்ட் எதிரில் என்பதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு 3 கி.மீ. நீளத்திற்கு வாகனங்கள் நின்றன.பல இடங்களில் அன்னதான ஏற்பாடு நடந்தாலும், பக்தர்களுக்கு போதிய தண்ணீர் பந்தல் வசதி இன்றி தண்ணீருக்கு அலைந்தனர். பாதுகாப்பிற்காக 1000க்கும் மேற்பட்ட போலீசார் குவிந்த நிலையில்அவர்களும் உணவிற்கும் அலையும் நிலை காணப்பட்டது.