பதிவு செய்த நாள்
09
மார்
2020
11:03
மேட்டுப்பாளையம் : காரமடை அரங்கநாதர் கோவில், மாசி மக தேர் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, பெருமாளை வழிபட்டனர்.
கோவை மாவட்டம், காரமடையில், மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலமான அரங்கநாதப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், மாசி மக தேர்த்திருவிழா, மார்ச் 2ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும், அரங்கநாதப் பெருமாள் வெவ்வேறு வாகனத்தில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று மாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, அரங்கநாதப் பெருமாள் தேருக்கு எழுந்தருளினார். மாலையில் தேரோட்டம் நடந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாசர்கள், சங்கு ஊதியும், சேகண்டி அடித்தும் செல்ல, பக்தர்கள், கோவிந்தா, கோவிந்தா என, கோஷமிட்டு பயபக்தியுடன் வழிபட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில், தேர் ஆடி அசைந்து சென்றது.பாதுகாப்பு பணியில், நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார், ஊர்காவல் படையினர் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகத்தினர், சிறப்பு பஸ்களை இயக்கி, பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்தனர்.தன்னார்வ அமைப்பினர், காரமடை நகரின் முக்கிய வீதிகளில் பந்தல்கள் அமைத்து, பக்தர்களுக்கு மோர் மற்றும் தண்ணீர் வழங்கினர்.