பதிவு செய்த நாள்
04
மே
2012
11:05
கம்பம்:கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் விடிய விடிய பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு அடுத்து, கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. மே 17ல் சாட்டுதல் செய்து, 18ல் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து தினசரி ஒவ்வொரு சமூகத்தினரும் மண்டகப்படி நடத்தினர். தினந்தோறும் வெவ்வேறு அலங்காரங்களில் அம்மன் வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அக்னிசட்டி எடுத்தல் நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை முதல், இரவு முழுவதும் விடிய விடிய ஆயிரக்கணக்கில் பக்தர்கள், அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.பக்தர்கள் செலுத்திய அக்னிசட்டிகள் கோயில் வளாகத்தில் மலைபோல் குவிந்தன. மாவிளக்கு எடுத்தல், ஆயிரம் கண் பானை, உருண்டு கொடுத்தல், முளைப்பாரி என பல்வேறு வேண்டுதல்கள் பக்தர்களால் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து நடந்த பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியில், கோயில் வளாகத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டதால், இடப்பற்றாக்குறை ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.கோயில் நிர்வாகம் தலையிட்டு பொங்கலிடுதலுக்கு நேரம் ஒதுக்கி கொடுத்தனர்.
மஞ்சள் நீராட்டம் : வேளாளப் பெருமக்கள் சங்கம் சார்பில் மஞ்சள் நீராட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான டிராக்டர்களில் டிரம்களில் மஞ்சள் நீரை நிரப்பிக் கொண்டு, நகரில் மஞ்சள் நீராட்டம் நடத்தினர். வேலப்பர் வேளாளர் சங்க தலைவர் காந்தவாசன், செயலாளர் மார்க்கண்டேயன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.நீர்மோர் பந்தல் : ஆர்.ஆர். விளையாட்டு கழகம், கர்னல் பென்னிகுக் ரியல் எஸ்டேட் மீடியேட்டர் அசோசியேசன் சார்பில் நீர்மோர் வழங்கப்பட்டது.