பதிவு செய்த நாள்
04
மே
2012
11:05
தியாகதுருகம்: பிரசித்தி பெற்ற, முடியனூர் தூக்கு தேர் திருவிழாவில், 60 அடி உயர தேரை, பக்தர்கள் தோளில் சுமந்து, ஊர்வலமாக சென்றனர். விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் அடுத்த, முடியனூர் திரவுபதியம்மன் கோவில் தூக்கு தேர் திருவிழா, கடந்த 23ம் தேதி துவங்கியது. நேற்று காலை, 10 மணிக்கு, 60 அடி உயர தேரை, சக்கரம் இன்றி அலங்கரித்து, அதை பக்தர்கள் தோளில் தூக்கி, ஊர்வலமாக கொண்டு சென்றனர். திரவுபதியம்மன், அர்ஜுனன் உற்சவர் சிலை அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு ஆராதனை நடந்தது. மூன்று நாட்கள் நடக்கும் இவ்விழாவில், ஆறு முறை, தேரை பக்தர்கள் தோளில் சுமந்து, ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர். உயரமான இத்தேரை, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், லாவகமாக தூக்கி செல்வதைக் காண, சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடினர். இன்று காலை, 9 மணிக்கு அரவாண் களபலி நிகழ்ச்சியும், மதியம் 1 மணிக்கு, காளி கோட்டை இடித்தல் நிகழ்ச்சியும் நடக்கின்றன. மாலை 5 மணிக்கு, தீமிதி திருவிழா நடக்கிறது. குழந்தைகளை ஊஞ்சல் தேரில் வைத்து சுற்றி வரும் நிகழ்ச்சி, இன்று மாலை நடக்கிறது.