பதிவு செய்த நாள்
10
மார்
2020
05:03
மேட்டுப்பாளையம்: தென் திருப்பதி திருமலையில் உள்ள, வேங்கடேஸ்வர சுவாமி கோவிலில், தெப்ப உற்சவ வைபவம் திருவிழா நடந்தது.
மேட்டுப்பாளையம் அருகே தென் திருப்பதி திருமலையில், வேங்கடேஸ்வர ஸ்ரீவாரி சுவாமி கோவில் உள்ளது. இங்கு மாசி தெப்போற்சவ திருவிழா, கடந்த, 5ம் தேதி துவங்கியது. ஒவ்வொரு நாளும் கோவில் அருகே உள்ள தெப்பக்குளத்தில், ஸ்ரீதேவி, பூதேவி, சமேதராக மலையப்பசுவாமி தேரில் எழுந்தருளும் தெப்ப உற்சவம் நடந்தது.
நேற்று காலை, 5:30 மணிக்கு சுப்ரபாதமும், அதைத் தொடர்ந்து விஸ்வரூப தரிசனமும் நடந்தது. பின்பு வைபவம் மற்றும் நேத்தர தரிசனம் ஆகிய பூஜைகள் நடந்தன. மாலையில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, திருவீதி வழியாக தெப்பக்குளத்திற்கு வந்தார். அங்கு பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்திருந்த, தெப்பக் குளத்தில் உள்ள சப்பரத்தில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைக்கு பின்பு மலர்கள் தூவப்பட்டு, தெப்பக்குளத்தில் ஏழு முறை சுற்றி வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து இரவு ஆர்த்தி புறப்பாடும், ஏகாந்த பூஜைகளும் நடந்தன.