நத்தம் : திண்டுக்கல் மாவட்டம்நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு ஏராளமானோர் பூக்குழி இறங்கினர். இங்கு கடந்த பிப்.24 அன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. பக்தர்கள் கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்து வந்து காப்புக்கட்டி 15 நாட்கள் விரதம் துவங்கினர். அம்மன் மயில் வாகனம், சிம்ம வாகனம் மற்றும் அன்ன வாகனங்களில் நகர்வலம் சென்றார்.மார்ச் 8ல் பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். மறுநாள் காலை அம்மனுக்கு மஞ்சள் பாவாடை கொண்டு வரப்பட்டது.
மாலையில் அரண்மனை பொங்கல், மாவிளக்கு மற்றும் காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை முதல் பக்தர் அக்னிச்சட்டி, கரும்பு தொட்டில், பால்குடம், அங்கப்பிரதட்சணம் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்தினர்.பகலில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. மாலையில் பூக்குழி பூஜை நடந்தது. பூஜாரியை தொடர்ந்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காப்பு கட்டிய பக்தர்கள் பூக்குழி இறங்கினர். இன்று மஞ்சள் நீராட்டு, பூப்பல்லக்குடன் விழா நிறைவடைகிறது.