புதுச்சேரி: திண்டிவனம் ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. திண்டிவனம் நல்லியக்கோடன் நகரில் இருந்து புதுச்சேரிக்கு வருகை புரிந்துள்ள அலர்மேல் மங்கா சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள், வைத்திக்குப்பம் கடற்கரையில் நேற்று முன்தினம் நடந்த மாசிமக கடல் தீர்த்தவாரி உற்சவத்தில் பங்கேற்றார்.
தொடர்ந்து, அம்பலத்தாடையார் மடத்து வீதியில் உள்ள வடமுகத்து செட்டியார் திருமண மண்டபத்தில் சுவாமிக்கு நேற்று காலை திருக்கல்யாண உற்சவம் நடந்தது.ஸ்ரீவில்லிபுத்துார் மணவாள மாமுனிகள் மடத்தின் 24வது பட்டம் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கினார்.முதல்வர் நாராயணசாமி, மாநில காங்., தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், எம்.எல்.ஏ.,க்கள் வையாபுரி மணிகண்டன், ஜான்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் மதிய விருந்து வழங்கப்பட்டது. மாலையில், சஷே வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை, புதுச்சேரி அலர்மேல் மங்கா சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் மாசிமக கடல் தீர்த்தவாரி கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.