புவனகிரி, கடலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலம் ஸ்ரீமுஷ்ணம். தானே தோன்றிய எட்டு திருத்தலங்களில் ஒன்று இது. இங்கு பூவராக சுவாமி சுயம்புவாக பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக தல புராணமும் வரலாறும் கூறுகின்றது. தமிழகத்தை ஆண்ட பற்பல மன்னர்கள் இக்கோயிலுக்கு திருப்பணி செய்திருக்கின்றனர்.
இத்திருக்கோயிலுக்கு நாயக்க மன்னர்கள் ஏராளமான திருப்பணிகள் செய்திருக்கின்றனர். சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த இத்திருக்கோயிலின் உற்சவமூர்த்தி யக்ஞவராகர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மாசி மாதத்தில் கடலாடி உற்சவம் செய்துகொள்கின்றனர். உற்சவத்தை முன்னிட்டு சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக திங்கட்கிழமை கிள்ளை தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். கிள்ளைக்கு அருகாமையில் உள்ள தைக்கால் கிராமத்தில் இஸ்லாமிய சமுதாய மக்கள் சுவாமிக்கு எதிர் வரவேற்பு அளித்து மரியாதை செய்தனர். கிள்ளை சமுத்திர தீர்த்தவாரி முடிந்ததும் அங்கேயே திருமஞ்சனம் மண்டகப்படி நடைபெற்றது. நேற்று மூங்கிலடிக்கு எழுந்தருளிய பெருமாள் நாளை வியாழக்கிழமை முதல் நான்கு நாட்கள் புவனகிரி வருகை தருகின்றார். வியாழக்கிழமை காலை 11 மணியளவில் புவனகிரி சௌராஷ்ட்ரா தெரு கண்ணன் மண்டபத்தில் எழுந்தருள அங்கு பொதுமக்கள் சார்பில் மண்டகப்படி நடக்கின்றது. மதியம் 3 மணி அளவில் அலங்கார திருமஞ்சனமும் இரவு 10 மணியளவில் திருவீதி புறப்பாடும் நடைபெற இருக்கிறது. வெள்ளிக்கிழமை காலை கீழ் புவனகிரி சீனிவாச பெருமாள் கோயிலில் மண்டகப்படி கண்டருளும் பெருமாள் சனிக்கிழமை புவனகிரி அக்ரகாரத்திலும்ஞாயிற்றுக்கிழமை வர்த்தகர் சங்கம் சார்பில் கடைவீதி மண்டபத்திலும் எழுந்தருளுகின்றார். சுவாமிக்கு மதியம் திருமஞ்சனமும் இரவு புறப்பாடும் நடைபெறுகிறது குறிப்பாக சனிக்கிழமை இரவு அக்ரஹாரத்தில் பிரசித்தி பெற்ற புஷ்ப பல்லக்கு உற்சவம் நடைபெற உள்ளது.இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மண்டகப்படி உபயதாரர்கள் மிக சிறப்பாக செய்து வருகின்றனர்.