தூத்துக்குடி வெங்கடாஜலபதி கோயில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மே 2012 11:05
தூத்துக்குடி : தூத்துக்குடி புதுக்கிராமம் வெங்கடாஜலபதி கோயில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி சிருங்கேரி மகாசுவாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி புதுக்கிராமத்தில் சிருங்கேரி மடத்திற்கு உட்பட்ட வெங்கடாஜலபதி கோயில் 1926ம் ஆண்டு கட்டப்பட்டது. இதன் கட்டுமான பணியினை சிருங்கேரி மடத்தின் தற்போதைய சுவாமிகளின் குருவாக இருந்த சந்திரசேகர பாரதீ சுவாமிகள் துவக்கி வைத்தார். அதன் பிறகு 1928ம் ஆண்டு முதல் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போதைய பாரதீ தீர்த்த மகா சுவாமிகளின் குருவான அபிநய வித்யா தீர்த்த சுவாமிகளும் இந்த கோயிலுக்கு விஜயம் செய்துள்ளார். இந் நிலையில் வெங்கடாஜலபதி கோயில் சுமார் 60 லட்ச ரூபாய் செலவில் பல்வேறு திருப்பணிகள் நடந்தது. பழைய கோயில் அப்படியே இடிக்கப்பட்டு புதிய கோயிலாக நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. யாகசால பூஜை, காலையில் இருந்து சுவாமிக்கு விசேஷ பூஜைகள், சிறப்பு அலங்காரங்கள் நடந்தது.காலையில் சாரதாம்பாள், வெங்கடாஜலபதி, ஆதிசங்கரர் ஆகிய மூன்று சிலைகள் பிரதிஷ்டை நடந்தது. முன்னதாக சிலைக்கு கீழே ஆகம விதிகளின் படி 8 வகையான மருந்துகள், நவரத்தினம், தங்கம், வெள்ளி போன்ற பொருட்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் சிலைகளை சிருங்கேரி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மகா சுவாமிகள் பிரதிஷ்டை செய்து சுவாமிகளுக்கு மகா சுவாமிகள் பூஜைகள் செய்தார். இதனை தொடர்ந்து பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. இதனை தொடர்ந்து சிருங்கேரி மகா சுவாமிகள் கோபுர கலசத்திற்கு பூஜைகள் செய்து புனித நீர் ஊற்றி சிருங்÷ரி சம்பிரதாய முறைப்படி மகா கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார். அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கும்பாபிஷேகத்தை கண்டுகளித்து, மகா சுவாமிகளை வழிபட்டனர். கும்பாபிஷேகத்திற்கு பின்னர் வந்த பொதுமக்கள் கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்த சிருங்கேரி மகா சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர். இன்று புதுக்கிராமம் சிருங்கேரி மடத்தில் மகா சுவாமிகள் நரஸிம்ஹ ஜெயந்தி விசேஷ பூஜை செய்கிறார். அதன் பிறகு சுவாமிகள் தூத்துக்குடி, திருச்செந்தூர் விஜயத்தை முடித்து கொண்டு நெல்லை மாவட்டம் செல்கிறார்.