பதிவு செய்த நாள்
14
மார்
2020
10:03
சென்னிமலை: அத்தனூரம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், ஏராளமானோர் பக்தர்கள் கலந்து கொண்டனர். சென்னிமலை, முகாசிபிடாரியூர் அருகே, அத்தனூரம்மன் கோவில் உள்ளது. சென்னிமலையில் வசிக்கும் ஆதி சைவ அர்ச்சகர்களின் குல தெய்வமாக உள்ளது. பழமையான கோவிலை புனரமைத்த நிலையில், கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிகள், கடந்த, 9ல் தொடங்கியது. இதையடுத்து, 11ல் யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை, 12ல் இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜை நடந்தது. நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜை தொடங்கியது. தொடர்ந்து காலை, 6:30 மணிக்கு சோமஸ்கந்தர் விமானம், மூலவர் சோமஸ்கந்தருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. காலை, 7:00 மணிக்கு, அத்தனூர் அம்மன் விமானம் கும்பாபிஷேகம், 7:40 மணிக்கு பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஸ்ரீ கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம், 57வது குருமகா சன்னிதானம் ராஜசரவண மாணிக்க வாசக சுவாமிகள் தலைமையில் சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர்.