பதிவு செய்த நாள்
14
மார்
2020
11:03
சபரிமலை: பங்குனி மாத பூஜைகளுக்காக, சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. பக்தர்கள் வரவேண்டாம் என்ற வேண்டுகோளை நிராகரித்து, நுாற்றுக்கணக்கானோர் சன்னிதானம் வந்திருந்தனர். சபரிமலை நடை, அனைத்து தமிழ் மாதமும் கடைசி நாள் திறக்கப்பட்டு, அடுத்த மாதம் முதல் ஐந்து நாட்கள் பூஜைகள் நடைபெறும். சபரிமலை அமைந்து உள்ள பத்தணந்திட்டை மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால், இந்த மாத பூஜைக்கு சபரிமலை வர வேண்டாம் என, திருவிதாங்கூர் தேவசம் போர்டு வேண்டுகோள் விடுத்தது.எந்த சிறப்பு பூஜைகளும் நடக்காது. அப்பம், அரவணை கவுன்டர் திறக்காது. அன்னதானம், ஓட்டல்கள் இல்லை எனவும், அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று மாலை, 5:00 மணிக்கு மேல்சாந்தி சுதிர்நம்பூதிரி, நடை திறந்த போது, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சன்னிதானம் வந்திருந்தனர். அவர்கள், கியூவில் நின்று தரிசனம் செய்தனர்.கொரோனா பீதியால் சிலர், முகக்கவசம் அணிந்து இருந்தனர். சிலர், துணியால் வாயை கட்டியிருந்தனர். நேற்று இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. திருவிதாங்கூர் தேவசம் போர்டின் குறைவான ஊழியர்கள் மட்டும் பணிக்கு வந்திருந்தனர்.இன்று காலை, 5:00 மணிக்கு நடை திறந்ததும், நெய்யபிஷேகம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, அத்தாழபூஜை நடைபெறும். 18-ம் தேதி இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.