ஊட்டி: மசினகுடி அருகே சிறியூர் மாரியம்மன் கோவிலில் நாளை மகா பூகுண்டம் திருவிழா நடக்கிறது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி மசினகுடி அருகே உள்ள சிறியூர் மாரியம்மன் கோவிலில் கடந்த 9ம் தேதி பூச்சாட்டு விழாவுடன் இந்த ஆண்டு திருவிழா துவங்கியது. தொடர்ந்து கம்பம் நாட்டு விழா, அலங்கார பூஜை, அம்மன் அழைப்பு, ஆகியவை நடந்தன, இன்று (16ம் தேதி) பூ குண்டத்திற்கு மரம் கொண்டு வரப்பட்டது. மாலை 3:00 மணிக்கு மாசி கரியண்ட ஐயன் அழைப்பு நடந்தது. ஜடய லிங்க ஐயன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள், பிரார்த்தனை நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். நாளை காலை 7:00 மணிக்கு விரதம் மேற்கொண்ட பக்தர்கள் பூ குண்டம் இறங்குகின்றனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கூக்கல் எட்டட்டி ஊர் தலைவர் மாதன் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர். விழாவையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.