பதிவு செய்த நாள்
17
மார்
2020
12:03
பொன்னேரி : ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மெதுார் பர்வதீஸ்வரர் கோவில் சிதிலமடைந்து கிடப்பதுடன், காமாட்சி அம்மன் சன்னிதி சுவர் இடிந்து விழுந்து கிடப்பது பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
பொன்னேரி அடுத்த, மெதுார் கிராமத்தில் உள்ள காமாட்சி சமேத பர்வதீஸ்வரர் கோவில், 1,116ம் ஆண்டு, ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டதாகும்.சோழர்கள் கால கட்டட கலையை உணர்த்தும் வகையில், பர்வதீஸ்வரர் சன்னிதியின் கருவறை கஜபிருஷடம் வடிவில் உள்ளது.கருங்கல் மற்றும் செங்கற்களை கொண்டு, கட்டடம் அமைக்கப்பட்டது. அர்த்த மண்டபம், மஹா மண்டபம் மற்றும் காமாட்சியம்மன், முருகன், விநாயகர் ஆகியோருக்கு தனி தனி சன்னிதிகள் உள்ளன.மிகவும் பழமை வாய்ந்த இத்திருத்தலம், தற்போது, சிதிலமடைந்து கிடக்கிறது. கோவில் சுவர்களின் செங்கற்கள் அரித்து கிடக்கிறது. 40 ஆண்டுகளாக கோவிலில் எவ்வித உற்சவங்களும் நடைபெறாமல் உள்ளன.சில தினங்களுக்கு முன், காமாட்சி அம்மன் சன்னிதி சுவர் இடிந்து விழுந்தது.
மற்ற சன்னிதிகளின் சுவர்களும், துாண்களும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இது கோவிலுக்கு வரும் பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.கோவில் திருப்பணிகளுக்காக, கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம், அறநிலையத் துறை ஆணையரின் பொது நல நிதியின் மூலம், 46 லட்சம் ரூபாய் செலவில், சீரமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுவரை அதற்கான பணிகள் எதுவும் நடைபெறாமல் உள்ளன.கோவில் சிதிலமடைந்தும், சுவர்கள் இடிந்தும் விழுவதால், உடனடியாக திருப்பணிகளை தொடங்க வேண்டும் என, கிராமவாசிகள் வலியுறுத்தி உள்னளர்.