பதிவு செய்த நாள்
17
மார்
2020
12:03
பேரூர்:பூண்டி வெள்ளியங்கிரி கோவில் மலையேற்றம் தீவிரமடைந்து, கேரளா மற்றும் கர்நாடக பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இங்கு, கொரோனா குறித்த சோதனையோ, விழிப்புணர்வோ செய்யப்படுவதில்லை. இதனால், கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
கோவை மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி கோவில் உள்ளது. ஏழாவது மலை உச்சியில் வீற்றிருக்கும் ஈசனை தரிசிக்க, பிப்., முதல், மே வரை, பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து, சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். நடப்பாண்டு சீசன், பிப்., 11ல் துவங்கியது. நேற்று வரை, சுமார் இரண்டு லட்சம் பக்தர்கள் வந்துள்ளனர். மலையேற்றத்துக்கு பயன்படும் மூங்கில் குச்சிகள் மட்டும், 40 ஆயிரம் வரை விற்றுள்ளது.சனி பிரதோஷம் மற்றும் வார விடுமுறை நாட்களில், பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. நேற்று, கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பக்தர்கள், குழுவாக வந்திருந்தனர்.
வெளிநாட்டினரும் மலையேற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டுகின்றன.தமிழக அரசு, பொதுமக்கள் வெளிமாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்க அறிவுறுத்தியுள்ளது. இதுபோன்ற இக்கட்டான நிலையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் பூண்டி வெள்ளியங்கிரி கோவிலில், கொரோனா வைரஸ் கண்டறியவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, சீசன் காலம் முடியும் வரை, நிரந்தர மருத்துவ குழுவை இங்கு நியமிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.