பதிவு செய்த நாள்
17
மார்
2020
01:03
வால்பாறை அடுத்துள்ளது சோலையாறு எஸ்டேட். இங்கு, 70 ஆண்டுகளுக்கு முன் சிறிய அளவில் சாலையோரம் முனீஸ்வரன் கோவில் கட்டப்பட்டது.அந்த எஸ்டேட் உயர்அதிகாரி ஒருவர் வாகனத்தில் செல்லும் போது, கோவில் அருகே வாகனம் பழுதாகி ரோட்டில் நின்றது. அன்று இரவு அவரது கனவில் தோன்றிய முனீஸ்வர சுவாமி, நான் வீற்றிருக்கும் இடத்திலேயே கோவில் கட்ட வேண்டும், என்று கூறியதாக கோவில் ஸ்தல வரலாறு கூறுகிறது.
அதன்படி, அதே இடத்தில் கோவில் எழுப்பி, திருப்பணிகள், அருள்பணிகள் நடக்கிறது. அன்று முதல் இன்று வரை இப்பகுதி மக்களால் கோவில் நிர்வாகிக்கப்பட்டு, பல்வேறு விழாக்கள் நடத்தப்படுகின்றன.கருவறையில் மூலவராக முனீஸ்வரன் கிழக்கு முகமாக நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வால்பாறை மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் இந்த கோவிலில் ஆண்டு தோறும் பொங்கல் திருநாளில் விழா நடைபெறுகிறது. இது தவிர, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.கோவிலில் வாரந்தோறும், வெள்ளி, சனிக்கிழமை சிறப்பு பூஜை நடக்கிறது. வெளியூர் பக்தர்களும் அதிகளவில் கோவிலுக்கு வருகின்றனர். பக்தர்கள் கேட்ட வரம் அருளும் முனீஸ்வர சுவாமியை, தரிசிக்க பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.தினமும், காலை, 7:00 முதல், மாலை 6:00 மணி வரை வழிபாடு நடக்கிறது. புதிய வாகனம் வாங்குவோர் கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு செய்கின்றனர். பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறியதும் நேர்த்திக்கடனாக கிடா வெட்டி, வழிபடுகின்றனர்.