திருப்புவனம்: திருப்புவனம் பூமாரி ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்புவனம் பூமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா பத்துநாட்கள் சிறப்பாக நடைபெறும். திருப்புவனம் மட்டு மல்லாது சுற்றுவட்டார கிராமமக்கள் எங்கு இருந்தாலும் விழாவிற்கு வந்து செல்வது வழக்கம், இந்தாண்டு திருவிழா நேற்று முன்தினம் இரவு 10:28 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கொடிமரத்திற்கு அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. அதன் பின் தீபாராதனை காட்டப்பட்டது. அம்மனுக்கு நேர்த்திக்கடனாக விரதமிருக்கும் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர்.பொங்கல் உற்ஸவம் மார்ச் 24ம் தேதி நடைபெறுகிறது. கொடியேற்றவிழாவில் மாரியம்மன் கோவில் பூஜாரிகள் செல்வராஜ், ராஜ்குமார் உள்ளிட்டோர் மற்றும் கொடியேற்ற வைபவத்தை பாபு பட்டர், குமார் பட்டர் மந்திரங்கள் முழங்க நடத்திவைத்தனர். ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் திருப்புவனம் நகர் பக்தர்கள்,பொது மக்கள் செய்திருந்தனர்.