பழநி: ‘‘உடல்நலம் பாதித்த பக்தர்கள் பழநி கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்’’ என, இணை ஆணையர் ஜெயச்சந்திர பானுரெட்டி கூறினார். தமிழகத்திலும் கொரோனா வைரஸ் நுழைந்துவிட்ட நிலையில், பழநி கோயிலுக்கு பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இக்கோயிலுக்கு நேற்று முன்தினம் காய்ச்சல் அறிகுறியுடன் மைசூருவில் இருந்து வந்த பக்தர் ஒருவரை, அனுமதிக்காமல் தடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இவ்வாறு காய்ச்சலுடன் பக்தர்கள் வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயில் இணை ஆணையர் கூறியதாவது: கொரோனா வைரஸ் காரணமாக கோயிலில் துப்புரவு பணிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளோம். வின்ச், ரோப்கார், படிப்பாதைகளில் பரிசோதனைக்கு பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். வைரஸ் பரவுவது கட்டுப்படும் வரை பொதுமக்களின் நலன் கருதி காய்ச்சல், இருமல், சளி, ஜலதோஷம், மூச்சுத் திணறல் உள்ள பக்தர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்’’ என்றார்.