பதிவு செய்த நாள்
19
மார்
2020
11:03
மேட்டுப்பாளையம்: வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், பகாசுரன் சுவாமி சிலைக்கு செல்லும் தரைப்பகுதி, அதிக சூடாக இருப்பதால், பக்தர்கள் நடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆகும். இங்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும், விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். வனபத்திரகாளியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், அம்மனை வழிபட்ட பின்பு, குண்டம் நடைபெறும் பகுதி வழியாக பகாசூரன் சுவாமி சன்னதிக்கு சென்று வழிபடுவது வழக்கம். கோவிலில் இருந்து பகாசூரன் சன்னதி, 500 அடி தூரத்தில் உள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், வெறும் காலில் பகாசூரன் சன்னதிக்கு பக்தர்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். தற்போது பகாசூரன் சன்னதி அருகே, 20 அடிக்கு மட்டும் மேட் போடப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் வெப்பம் தாங்க முடியாமல், பக்தர்கள் வேகமாக ஓடிச் சென்று சாமியை கும்பிடும், கும்பிடாமலும் ஓடி வருகின்றனர். அதனால் கோவிலில் இருந்து பகாசூரன் சன்னதி வரை, மேட் போடுவதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து கோவில் உதவி கமிஷனர் ஹர்ஷினி கூறுகையில்," வழக்கமாக ஏப்ரல் மாதம் பாதிக்குமேல் பக்தர்கள் நடந்து செல்லும் வழியில் பந்தல் அமைத்துக் கொடுப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதனால் கோவில் அம்மன் சன்னதி வாசப்படியில் இருந்து, பகாசூரன் சன்னதி வரை, இரு பக்கம், 600 அடிக்கு மூன்று அடி அகலத்தில் மேட்டுகள் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை (இன்று) பக்தர்கள் நடந்து செல்லும் வழிகளில் தரையில் பதிக்கப்பட்ட உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நுழைவாயில் முன்பு கை, கால்களை சுத்தமாக கழுவி வருவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு உதவி கமிஷனர் கூறினார்.