பதிவு செய்த நாள்
19
மார்
2020
11:03
திருப்பதி: திருமலையில் நடத்தப்பட்டு வரும் ஆர்ஜித சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலையில் ஏழுமலையானுக்கு தினசரி பல ஆர்ஜித சேவைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
உற்ஸவ மூர்த்திகள் முன்னிலையில் நடக்கும் இந்த சேவைகளில் பக்தர்கள் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்து பங்கேற்கின்றனர்.இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதால் பக்தர்கள் அனைவரும் ஓரிடத்தில் கூடுவதை தடுக்க தேவஸ்தானம் தினசரி நடத்தப்பட்டு வரும் ஆர்ஜித சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்த சேவைகள் அனைத்தும் ஏழுமலையானுக்கு இனி தனிமையில் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேற்படி ஆர்ஜித சேவைகள் டிக்கெட் பெற்ற பக்தர்கள் அவற்றின் தேதிகளை மாற்றிக் கொள்ளலாம் அல்லது ரத்து செய்து கொள்ளலாம். ரத்து செய்பவர்களுக்கு பணம் திருப்பி வழங்கப்படும்.அவ்வாறு செய்ய விரும்பாதவர்கள் திருமலையில் உள்ள கூடுதல் செயல் அதிகாரி அலுவலகத்திற்கு சென்று ஆர்ஜித சேவைகளுக்கு பதிலாக வி.ஐ.பி. பிரேக் தரிசன அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.மேலும் மார்ச் ௨௦ முதல் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கைகுழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்ட முதன்மை தரிசனங்கள் ரத்து செய்யப்படுவதுடன் அங்கபிரதட்சண டோக்கன்கள் வழங்குவதும் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
கோயிலை மூடினாலும் தோஷம் இல்லை: தேவஸ்தான தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர் கூறியதாவது:நாடு முழுவதும் கொரோனா வைரஸ், வேகமாக பரவி வருகிறது. இதனால், மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிக்காமல், கோயிலை மூடினால் எவ்வித தோஷமும் இல்லை. இந்த நோய் பரவுவதை தடுக்க, தேவஸ்தானமும் தகுந்த நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது. மேலும், உலக நன்மையை கருதி, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, திருமலையில் சதுர்வேத பாராயணம் நடைபெற்று வருவதுடன், மாத இறுதியில் தன்வந்திரி யாகமும் நடத்த, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.