புதுச்சேரி: கொரோனா வைரஸ் தொற்றை தவிர்க்க கோவில்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு பக்கதர்களுக்கு இந்த சமய அறநிலைய துறை ஆணையர் சச்சிதானந்தம் வேணடுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கொரோனா வைரஸ் தொற்றை தவிர்க்க சுகாதாரத்துறை இயக்குனர் ஒரு சில வழிமுறைகளை கையாள அறிவுறுத்தியுள்ளார். அவற்றுள் ஒன்றாக அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவுதல் மற்றும் பொதுமக்கள் ஓரிடத்தில் ஒன்று கூடுவதை தவிர்த்தல் ஆகியவை அடங்கும். கோவில்களில் பூஜை மற்றும் திருவிழாக்களில் பக்தர்கள் ஒன்று கூடுவது வழக்கம். இவ்வாறு ஓரிடத்தில் மக்கள் ஒன்று கூடுதல் தற்போது உள்ள சூழலில் தவிர்க்க வேண்டியுள்ளது. எனவே புதுச்சேரி மாநிலத்தில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிர்வாகத்தினர் நிலமை சீராகும்வரை பக்தர்கள் ஒன்று கூடும் வகையிலான திருவிழாக்கள் மற்றும் பூஜைகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். பக்தர்களும் தங்களின் உடல்நிலை பாதுகாப்பு கருத்தில் கொண்டு கோவில் வளாகத்தில் முடிந்த மட்டில் ஒன்று கூடுவதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் பிரசாதம் வழங்குபவர் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களும் அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவுதல் மற்றும் கொரோனா வைரஸ் குறித்து சுகாதாரத்துறை அறிவித்துள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், கோவில் வளாகத்தை அவ்வப்போது தனி கவனம் செலுத்தி சுத்தபடுத்த அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.