பதிவு செய்த நாள்
22
மார்
2020
02:03
கொரோனா தாக்கம், வரும், 28க்கு பின் குறையும், என, சென்னையை சேர்ந்த, பிரபல ஜோதிடர், பரணிதரன் நம்பிக்கை தெரிவித்தார்.
நம் நாளிதழுக்கு, அவர் அளித்த பேட்டி : கால சக்கரத்தில், பாக்கிய ஸ்தானம் எனும், தனுசு ராசியில், விகாரி ஆண்டு துவங்கியது முதல், ஆயுள், நோய்களுக்கு அதிபதியான சனி பகவானும், ஞான மோட்சக்காரகனான கேது பகவானும், சஞ்சரித்துவருகின்றனர். கேது அன்னிய மொழிகளுக்கும், அன்னிய சேதங்களுக்கும் ஒப்பிடக்கூடியவர். விகாரி ஆண்டு துவங்கியது முதல், அன்னிய நாடுகளால், நம்முடைய நாடு பிரச்னைகளை சந்தித்து வந்தது.
கடந்த, 2019 அக்., 29ல், குரு பகவான் பெயர்ச்சியாகி, தனுசுவிற்கு வர, அன்று முதல் பிரம்மஹத்தி தோஷம் என்ற நிலை நாட்டிற்கும், அன்று முதல் பிறக்கும் குழந்தைகளுக்கும் என்றானது. பிரம்மஹத்தி தோஷம் காலத்தில், அரசுக்கு எதிரான போராட்டங்கள், இனம்புரியாத பயம், அன்னிய நாடுகளின் வழியே ஆபத்தான நிலை என்றெல்லாம் உருவாகும் என்பது விதி.
இந்நிலையில், பிப்., 9 முதல், ருணரோக காரகத்திற்கு அதிபதியான செவ்வாயும், சனி, கேது, குருவுடன் இணைய, அன்னிய தேசத்தில் உருவான, இனம் புரியாத நோயால், நம் நாட்டிற்கு பாதிப்பு ஏற்பட்டு, பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.இதன் முடிவு என்ன என்று, தெரிந்து கொள்ளும்போது, வரும், 23ல் செவ்வாய் பகவான், இடம் பெயர்ச்சியாக, மகரத்திற்கு செல்கிறார். இதன் காரணமாக, இப்போது உண்டாகியுள்ள, அச்சம் தணியும். கொரோனா தாக்கத்தில் இருந்து, விடுபடுவதற்கான நிலை உருவாகும்.இதற்கும் மேலாக, வரும், 28ல் குரு பகவான், அதி சாரமாக சனி பகவானை விட்டு, மகரத்திற்கு செல்கிறார் என்பதால், நாட்டிற்கும், மக்களுக்கும் உண்டாகியிருந்த, பிரம்மஹத்தி தோஷம் முடிவிற்கு வருகிறது. தன் காரணமாக, அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளால், அனைத்தும் ஒரு கட்டிற்குள் வரும். போராட்ட சூழல் மறையும்; பேரிடர் காலம் முடியும். அரசின் மீது, மக்கள் நம்பிக்கை கொள்ளும் வழி உண்டாகும்.இவ்வாறு, அவர் கூறினார். - நமது நிருபர் -