கொரோனா வைரஸ் எதிரொலி வெறிச்சோடிய திருநள்ளாறு கோவிலில்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2020 02:03
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோவிலில் கொரோனா வைரஸ் எதிரொலியால் நேற்று பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வரவில்லை இதனால் வெறிச்சோடி காணப்பட்டது.
காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவக்கிரக ஸ்தலங்களில் சனிபரிகார ஸ்தலமாக திருநள்ளாறு விளங்கி வருகிறது.இதனால் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருநள்ளாறு வருகின்றனர். இந்நிலையில் நாட்டின் அச்சுறுத்தும் வகையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு பல உயிரிழந்து வருகின்றனர்.இதனால் காரைக்கால் மாவட்டத்தில் பக்தர்கள் நலன் கருதி திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் உள்ள நளன் குளத்தில் பக்தர்கள் குளிக்க அரசு தடை விதித்து கடந்த 13ம் தேதி கோவில் நிர்வாகம் நளம் குளத்தில் உள்ள தண்ணீர் அனைத்தையும் வெளியேற்றப்பட்டது. மேலும் பக்தர்களின் நலன் கருதி மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் முதல் வரும் 31ம் தேதி வரை கோவில் நடை மூடப்பட்டது. மேலும் சிறப்பு பூஜைகள் பரிகாரங்கள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் பல்வேறு பகுதியில் இருந்து சனிபகவானை தரிசனம் மேற்கொள்வது வழக்கம் ஆனால் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வைரஸ் எதிரொலியால் பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வரவில்லை இதனால் நளன்குளம். ராஜகோபுரம். வடக்கு வீதி.தெற்கு வீதி மற்றும் கார் பார்க்கிங் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பக்தர்கள் யாரும் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.மேலும் கோவிலை சுற்றி பல்வேறு முக்கிய சாலைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.