சிவன் கோயில் ராஜகோபுரம் கட்ட முடியனூர் பக்தர்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2020 02:03
தியாகதுருகம்: முடியனூர் ஆதி அருணாசலேஸ்வரர் கோயில் ராஜ கோபுரத்தை கட்டி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தியாகதுருகம் அடுத்த முடியனூர் கிராமத்தில் நூற்றாண்டு பழமையான ஆதி அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. திருவண்ணாமலை சிவன் கோயிலுக்கு இணையான ஐதீகம் கொண்டதாக இக்கோயில் விளங்குகிறது. கார்த்திகை மாத தீப திருவிழா இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கோயில் உட்பிரகார மண்டபத்தின் மேற்கூரையில் 200 ஆண்டுகள் பழமையான மூலிகை வண்ணக் கலவையால் வரையப்பட்ட அரிய ஓவியங்கள் உள்ளன. இக்கோயில் ராஜகோபுரம் கட்டப்படாமல் முகப்பு வாசல் மண்டபம் மட்டும் உள்ளது. பழம்பெருமை வாய்ந்த இக்கோவில் ராஜ கோபுரத்தை கட்ட வேண்டும் என பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேபோல் கோயிலின் உட்பிரகாரம் போதிய பராமரிப்பின்றி சேதமடைந்து வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இதை கண்டுகொள்ளவில்லை. முடியனூர் கிராமத்திற்கு சிறப்பு சேர்க்கும் இக்கோயிலை புதிப்பித்து ராஜகோபுரம் அமைத்து கும்பாபிஷேக விழா நடத்த வேண்டும் என்பது இப்பகுதி பக்தர்கள் கோரிக்கையாகும்.