பதிவு செய்த நாள்
22
மார்
2020
03:03
தர்மபுரி: சனி பிரதோஷ நாளான நேற்று, கோரோனா வைரஸ் எதிரொலியால், தர்மபுரியில் உள்ள பல்வேறு சிவன் கோவில்கள் பூட்டப்பட்டிருந்ததால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தமிழகம் முழுவதும், கோரோனா வைரஸ் எதிரொலியால், ஜவுளிக்கடை, நகைக்கடை, ஓட்டல், சினிமா தியேட்டர் வங்கி உள்ளிட்ட, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை, வரும், 31 வரை மூட, மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளது. அதன்படி, தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்கள், நேற்று முன்தினம் முதல் பூட்டப்பட்டன. இந்நிலையில், சனி பிரதோஷ நாளான நேற்று, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோவில்கள் பூட்டப்பட்டன. இதனால், சுவாமி தரிசனம் செய்யவும், பிரதோஷ வழிபாடு செய்யயும் அபிஷேகத்துக்கு, பால், இளநீர், சந்தனம், கரும்புச்சாறு, தேன் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களை வாங்கிக்கொண்டு, இக்கோவில்களுக்கு வந்த பக்தர்கள், கோவில் பூட்டப்பட்டிருந்ததை கண்டு, ஏமாற்றத்துடன் திரும்பினர். கோவில் பூட்டப்பட்டாலும், சுவாமிக்கு காலை மற்றும் மாலை நேரத்தில் செய்ய வேண்டிய அபிஷேகம் மற்றும் பூஜைகள், பக்தர்கள் கூட்டம் இல்லாமல், தொடர்ந்து நடத்தப்படுவதாக கோவில் பூசாரிகள் தெரிவித்தனர்.