பதிவு செய்த நாள்
22
மார்
2020
03:03
ஓசூர்: கிருஷ்ணகிரியில், அரசின் உத்தரவை மீறி திறக்கப்பட்ட, காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில், மாவட்ட கலெக்டர் நேற்று ஆய்வு செய்து, கோவிலை மூட உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, வாரந்தோறும் சனிக்கிழமை, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் கூட பக்தர்கள் வருவதால், கூட்டம் அதிகமாக இருக்கும். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம் முதல் கோவில் மூடப்பட்டது. இந்நிலையில் நேற்று, சனிக்கிழமை என்பதால், கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். அந்த நேரத்தில், மாவட்ட கலெக்டர் பிரபாகர், காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலுக்கு ஆய்வு செய்ய சென்றார். அப்போது, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டிருப்பதை பார்த்த கலெக்டர் பிரபாகர், கோவிலில் பூஜைகள் மட்டுமே நடத்த வேண்டும். பக்தர்களை எக்காரணம் கொண்டும் வரும், 31 வரை அனுமதிக்க வேண்டாம் என, கோவில் ஊழியர்களிடம் அறிவுறுத்தினர். தொடர்ந்து, கோவிலில் இருந்து பக்தர்கள் வெளியேற்றப்பட்டனர். அத்துடன், பக்தர்கள் கோவிலுக்குள் நுழையாதபடி நுழைவுவாயில் பூட்டப்பட்டது. இதனால், கோவிலுக்கு வெளியே நின்றவாறு பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.