கொரோனா வீட்டிற்குள் வராத வகையில் தடுக்க சொம்பு வைத்த கிராம மக்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மார் 2020 04:03
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே கொரோனா வைரஸ் தொற்று நோய் வீட்டிற்குள் வராமல் தடுக்கும் வகையில் கிராம மக்கள் மஞ்சள் கலந்த நீரை வேப்பிலையுடன் சொம்பை வெளியே வைத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று நோய் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதா என்ற சர்ச்சை எழுந்து வருகிறது. இந்நிலையில், அரசு மருத்துவமனை, போலீஸ் நிலையங்கள், அரசு போக்குவரத்து கழக பணிமனை, வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அலுவலகத்திற்குள் செல்வோர் கைகளை சோப்பு தண்ணீரில் கழுவிய பின்னரே உள்ளே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல் அலுவலகத்தில் பணிபுரிந்து விட்டு வீட்டிற்கு செல்வோரும் கை, கால்களை சோப்பு தண்ணீரால் கழுவி விட்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே மாட்டு சாணி, கோமியம், மஞ்சள் கலந்த நீர் ஆகியவற்றை வீட்டிற்குள் தெளித்து சுத்தப்படுத்தினால் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாது என்று தகவல் பரவி வருகிறது.
அதன்பேரில் கொரோனா தொற்றுநோய் தங்கள் வீட்டிற்குள் வராமல் இருக்க தடுக்கும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த நகர் மன்னார்குடி பகுதியில் வசிக்கும் மக்கள் சில நூதனமுறைகளைக் கையாண்டு உள்ளனர். இதற்க்காக செம்பு கலந்த சொம்பில் மஞ்சள், சுண்ணாம்பு கலந்த நீரை வேப்பிலையால் வீட்டிற்குள் அனைத்துப் பகுதிகளிலும் தெளித்துள்ளனர். பின்னர் அந்த சொம்பை வீட்டிற்கு வெளியே கோலம் போட்ட இடத்தில் வைத்து கொரோனா வைரஸ் வீட்டிற்குள் வராமல் தடுக்கும் வகையில் வைத்துள்ளனர். இதுபோன்று அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் வைத்துக் கொரோனா வைரசை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.