ராசிபுரம்: கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க கிராம மக்கள் நூதன வழிபாடு செய்தனர். கொரோனா பாதிப்பு குறித்து தகவல் வரத்தொடங்கியதில் இருந்து பல்வேறு கருத்துகள் உலவத்தொடங்கியுள்ளன. ராசிபுரம் அடுத்த வடுகம் கிராமத்தில் கொரோனா நோய் பரவாமல் இருக்க நேற்று முன்தினம் வீட்டு வாசலில் சானமிட்டு, கோலமிட்டனர். பின்னர் மஞ்சள் தெளித்து சொம்பில் மஞ்சள் நீருடன் வேப்பிலையை சொருகி வைத்து, அகல் விளக்குஏற்றி வழிபட்டனர். வடுகம் கிராமத்தில் உள்ள, 500க்கும் மேற்பட்ட வீடுகள் அனைத்திலும் இந்கத வழிபாட்டை மேற்கொண்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்த போது, அம்மை உள்ளிட்ட நோய்கள் வந்தால் சம்பந்தப்பட்ட வீட்டில் மட்டுமே வேப்பிலை சொருகுவது வழக்கம். ஆனால், கொரோனா உலகம் முழுவதும் பரவி வருவதால், எங்கள் கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் இதுபோன்ற வழிபாட்டை செய்துள்ளோம். எங்கள் கிராமத்தில் கொரோனா உள்ளிட்ட எவ்வித தொற்றுநோயும் கண்டிப்பாக வராது என்று நம்புகிறோம். இவ்வாறு அப்பகுதி மக்கள் கூறினர்.