பதிவு செய்த நாள்
05
மே
2012
10:05
உடுமலை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், வன வளம் மற்றும் மலைவாழ் மக்களின் வரலாற்றை கூறும் பழங்கால சின்னங்கள் பராமரிப்பு இல்லாமல் புதைந்து வருகிறது. தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி சின்னங்களை அருங்காட்சியகத்தில் வைத்து பராமரிக்க வேண்டும்.உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உடுமலை, அமராவதி வனசரக பகுதியில் தளிஞ்சி, ஈசல்திட்டு, கோடந்தூர் ஆகிய மலைவாழ் குடியிருப்புகளில் பெருங்கற்காலத்தை சேர்ந்த கல் திட்டைகள், பாறை ஓவியங்கள், நடுகற்கள், புலி குத்தி கல் ஆகியவை அதிகளவு காணப்படுகின்றன.தளிஞ்சி: ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய பாளையக்காரர்களின் முக்கிய மையமாக தளிஞ்சி மலைவாழ் குடியிருப்பு இருந்துள்ளது. திண்டுக்கல், கோவை மாவட்டங்கள் மற்றும் கேரளாவை சேர்ந்த பாளையக்காரர்களுக்கு இணைப்பு பாதையாக மேற்கு தொடர்ச்சி மலை அமைந்திருந்தது. தளிஞ்சியில் பெரிய கோட்டை இருந்ததற்கான சுவடுகள் தற்போதும் உள்ளது.தளிஞ்சி மலைவாழ் குடியிருப்பிலிருந்து ஒரு கி.மீ., தூரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் இடிந்த கோட்டை சுவர்களின் கற்கள், சுடாத செங்கற்கள் காணப்படுகின்றன. அருகில், போரில் இறந்த வீரர்கள் மற்றும் குறு நில மன்னர்களுக்கு வைக்கப்படும் நடுகல் முறையில் சிலைகள் காணப்படுகின்றன.சிலையில், மன்னர் ஒருவரை மலைவாழ் மக்கள் எடுத்து வருவது போன்ற சிலை இங்குள்ளது.
மலைவாழ் மக்கள் அவசர காலங்களில் சமவெளிப்பகுதிக்கு வர இரு மரக்குச்சிகளின் நடுவில் துணி கட்டி தொட்டில் வடிவில் மனிதர்களை தூக்கி வரும் பழக்கம் தற்போதும் உள்ளது.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், திருமூர்த்திமலை அருகேயுள்ள தளி பாளையக்காரர்களின் கட்டுப்பாட்டில் தளிஞ்சி மலைப்பகுதி இருந்தது. அவர்கள் போர்க்காலத்தில் வேறு பகுதிக்கு செல்ல எங்கள் குடியிருப்பு மக்கள் உதவியுள்ளனர். இதை நினைவு கூறும் வகையில் சிலை உள்ளது, என்றனர். மலைவாழ் மக்களிடையே பாரம்பரியாக சொல்லப்படும் இந்த தகவலை உறுதி செய்யும் வகையில், தளி பாளையக்காரர்கள் ஆங்கிலேயருக்கு எதிரான போரில் கொல்லப்பட்டு அவர்களின் கோட்டை அழிக்கப்பட்டது. இவர்களின் சிலைகள் திருமூர்த்தி அணைப்பகுதியில் தற்போதும் உள்ளது.பெருங்கற்கால சின்னங்கள்:இறந்த வீரர்களின் உடலை மூன்று சதுரமான கற்களின் கீழ் புதைப்பது தமிழர்களின் வழக்கமாகும். குள்ளமான உருவமுள்ள மனிதர்கள் வாழ்ந்த வீடு என மக்களால் தெரிவிக்கப்படும் கல் திட்டைகள் தளிஞ்சி, கோடந்தூர் ஆகிய மலைவாழ் குடியிருப்பு பகுதிகளில் அதிகளவு உள்ளது. இந்த அமைப்பின் உட்பகுதியில் இறந்த வீரனின் உருவம் மற்றும் ஆயுதங்கள் குறித்து ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பராமரிப்பில்லாமல் இருப்பதால் கல் திட்டைகளில் ஓவியங்கள் அழிந்து வருகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன் மலைவாழ் மக்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் போர் கருவிகள் குறித்த அரிய வகை ஓவியங்களை பாதுகாக்க வேண்டும்.புலி குத்தி கல்: சுற்றுசூழல் குறித்த ஆர்வம் அதிகரித்துள்ள தற்போதைய நிலையில், வனப்பகுதியின் வளம் அங்குள்ள புலிகளின் எண்ணிக்கையை வைத்து கணக்கிடப்படுகிறது. இந்நிலையில், உடுமலை வனசரகத்திற்குட்பட்ட ஈசல் திட்டு மலை வாழ் குடியிருப்பிற்கு செல்லும் வழியில் பழமை வாய்ந்த நடுகல் உள்ளது. கல்லில் கிராமத்தில் புகுந்த புலியை கொன்ற வீரனின் சிலை வடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈசல்திட்டு மற்றும் சுற்றுப்பகுதிகளில் புலிகள் அதிகளவு வாழ்ந்தது தெரியவந்துள்ளது. நடுகல்லை ஜல்லிபட்டி கிராமத்தை சேர்ந்த ஒரு சமூகத்தினர் தற்போதும் வழிபட்டு வருகின்றனர். இந்த நடுகல்லும் பராமரிப்பில்லாமல் உருவங்கள் அனைத்தும் சிதைந்து வருகிறது. தேவை ஆய்வு:வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த வரலாற்று சின்னங்கள் குறித்து தொல்லியல் துறை மற்றும் வரலாற்று ஆய்வாளர்களால் விரிவான ஆய்வு இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. வனத்துறை கட்டுப்பாட்டின் கீழுள்ள இப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள வனசட்டங்கள் அடிப்படையில் அனுமதி வழங்கப்படுவதில்லை.அடர்ந்த வனப்பகுதியில் காணப்படும் வரலாற்று சின்னங்கள் குறித்து பரம்பரையாக வனத்தில் வாழ்ந்து வரும் மலைவாழ் மக்களுக்கே தெரிவதில்லை. சில வரலாற்று சின்னங்கள் குறித்து பல்வேறு விதமான கற்பனையான கதைகளை தெரிவித்து அவற்றை மலைவாழ் மக்கள் பராமரிக்காமல் விட்டு வைத்துள்ளனர்.அரிய வகை வரலாற்று சின்னங்கள் வனப்பகுதியில் முற்றிலுமாக புதையும் முன் தொல்பொருள் துறையினர் தனியாக ஒரு குழு அமைத்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நடுகற்கள் மற்றும் சிலைகளை அருங்காட்சியகத்தில் வைத்து பராமரிக்க வேண்டும்."வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வுவனத்துறையினர் கூறுகையில் உடுமலை மற்றும் அமராவதி வனசரக பகுதியில் பல்வேறு வரலாற்று சின்னங்கள் உள்ளன. மத்திய, மாநில அரசுகளிடம் அனுமதி பெற்று வரலாற்று ஆய்வாளர்கள் முதன்முறையாக தற்போது இரு வனசரக பகுதிகளிலும் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களை சமர்ப்பிக்கும் ஆய்வறிக்கை அடிப்படையில் வரலாற்று சின்னங்களின் முக்கியத்துவம் கண்டறியப்படும். பின்னர், அரசு உத்தரவின் அடிப்படையில் அவற்றை பாதுகாக்க பணிகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.