பதிவு செய்த நாள்
05
மே
2012
10:05
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நேற்று உற்சவம், கோலாகலமாக நடந்தது.மாமல்லபுரம்ஸ்தலசயனப்பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் முக்கிய உற்சவமான, திருத்தேர் உற்சவம், நேற்று காலை நடந்தது. வழக்கமான வழிபாட்டிற்கு பிறகு, காலை 7 மணிக்கு யாகசாலை பூஜை நடந்தது. 8.30 மணிக்கு, ஸ்தலசயனப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன், சிறப்பு அலங்காரத்தில், தேரில் எழுந்தருளினார். தேரில் வழிபாடு முடிந்தபின், மேளதாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழங்க, காலை 9.25 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், சித்திரைப் பெருவிழா, கடந்த மாதம் 28ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏழாம் நாள் திருவிழாவான, நேற்று காலை ரதோற்சவம் நடந்தது. காலை 8 மணிக்கு, சுவாமி அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். பின்னர் பக்தர்கள் வடம்பிடிக்க தேரோட்டம் நடந்தது. அஷ்டபுஜ பெருமாள் காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் குறிப்பிடத்தக்கது, அஷ்டபுஜப் பெருமாள் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் மே மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். வழக்கம்போல் இந்த ஆண்டு உற்சவம் நேற்று துவங்கியது. நேற்று காலை 6 மணிக்கு, மேளதாளங்கள் ஒலிக்க, விற்பனர்கள் வேதம் ஓத, கொடியேற்றப்பட்டது. அதன்பின் பெருமாள், சப்பரத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இரவு சிம்ம வாகனம்உற்சவம் நடந்தது. திருக்கழுக்குன்றம் வல்லிபுரம் கிராமத்தில், அம்புஜவல்லி நாயிகா உடனுறை ஆதிகேசவப்பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், 2008ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் நடந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, நேற்றுமுன்தினம் திருப்பாவாடை உற்சவம் நடந்தது.காலை 9.30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதைத்தொடர்ந்து வடை, முறுக்கு, அப்பம், தேன்குழல் மற்றும் பல்வேறு பட்சணங்கள், சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம், பல்வேறு காய்கறிகளுடன் கூடிய குழம்பு ஆகியவை, பகல் 1.30 மணிக்கு, சுவாமிக்கு நைவேத்யம் செய்து வழிபாடு நடந்தது.