பதிவு செய்த நாள்
02
ஏப்
2020
02:04
கோவை : ஈஷா மையத்தில் யாருக்கும், கொரோனா தொற்று அறிகுறி இல்லை. வதந்தி பரப்புவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஈஷா மையத்தினர் கோரியுள்ளனர்.
கோவை ஈஷா யோகா மையம் வெளியிட்டு உள்ள அறிக்கை: உலக சுகாதார நிறுவனம், கொரோனா ஒரு நோய் தொற்று என அறிவிப்பதற்கு முன்பாகவும், மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு, பயண தடைகளை விதிப்பதற்கு பல நாட்கள் முன்பாகவும், ஈஷா மையத்துக்கு வந்த வெளிநாட்டினருக்கு, சுகாதார வழிகாட்டு நெறிமுறைகள் விதிக்கப்பட்டன. அவை தீவிரமாகவும் செயல்படுத்தப்பட்டன. சீனா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தோர், ஈஷா மையத்துக்கு வர வேண்டாம் என வேண்டுகோள் விடப்பட்டது. மற்ற வெளிநாட்டினர், கட்டாயம், 28 நாட்கள் தனிமையில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. கட்டாய மருத்துவ பரிசோதனை, சமூக இடைவெளி நெறிமுறைகளை, தற்போது வரை, ஈஷா பின்பற்றி வருகிறது. பிப்ரவரி மாதத்தில் இருந்தே, மாநில சுகாதார அதிகாரிகள், ஈஷா யோகா மையத்துக்கு வந்து மருத்துவ பரிசோதனைகளை, பார்வையிட்டு வருகின்றனர்.இங்கு தங்கியுள்ள ஒருவருக்கு கூட கொரோனா தொற்றுக்கான அறிகுறி இல்லை. இதுதொடர்பாக, ஆதாரமின்றி வதந்தி பரப்புவோர் மீது, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.