பதிவு செய்த நாள்
02
ஏப்
2020
03:04
பல்லடம்: 106 ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட பழமையான பாக்கெட் கையேட்டில், கொரோனா குறித்த மருத்துவ தகவல் இருப்பது, பலரையும் வியப்படைய செய்துள்ளது
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும், மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. வைரஸை கட்டுப்படுத்துவதற்காக, சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி, கை கழுவுதல், முக கவசம் அணிவது, மற்றும் சமூக விலகல் உள்ளிட்டவற்றை, பொதுமக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்த இதுவரை உலக அளவில் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான ஆராய்ச்சிகளும் உலகம் முழுவதும் நடந்து வருகிறது. இதனிடையே, வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ள, மஞ்சள், வேப்பிலை, கஷாயம் உள்ளிட்ட பல்வேறு இயற்கை முறையிலான வழிமுறைகளை பயன்படுத்துமாறு, சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்படுகின்றன. அவ்வாறு, 106 ஆண்டுகளுக்கு முன் வெளியான பாக்கெட் வைத்தியம் எனும் நூலில், கொரோனா வைரஸ் குறித்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது, பலரையும் வியப்படைய செய்து வருகிறது.
துளசிங்க முதலியார் என்பவர் மூலம், 1914ம் ஆண்டு, பாக்கெட் வைத்தியம் நூல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கொரோனா மாத்திரையாக, மிளகு, லவங்கம், ஜாதிக்காய், ஓமம், திப்பிலி உள்ளிட்ட, 14 வகையான பொருட்களை, உலர வைத்து அரைத்து சாப்பிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 106 ஆண்டுகளுக்கு முன், கொரோனா நோய் குறித்த மருத்துவ தகவல், தமிழ் நூல் ஒன்றில் வெளியாகியுள்ளது, அனைவரையும் வியப்படைய செய்துள்ளது. இத்தகவல், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.