வத்திராயிருப்பு:வத்திராயிருப்பு மந்தை மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா நடந்தது. கடந்த மாதம் கணபதி ஹோமத்துடன் கோயிலில் கொடியேற்றம் நடந்தது. 10 நாட்களாக கோயிலில் சிறப்பு பூஜைகள், அம்மன் சப்பரபவனி நடந்தது. 11 ம் நாள் நிகழ்ச்சியாக காப்புக்கட்டு வைபவமும் அம்மன் எழுந்தருளல், கரகம் எடுத்தல் நடந்தது. ஏராளமான பெண்கள் கரகம் எடுத்து ஊர்வலம் வந்தனர். இறுதிநாள் நிகழ்ச்சியாக பூக்குழி இறங்குதல் நடந்தது. காலையில் தீ மூட்டப்படும் "பூ வளர்த்தல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் எண்ணெய் ஊற்றி வழிபட்டனர். மாலையில் ஏராளமான பக்தர்கள் குழந்தைகளை சுமந்தபடியும் முதியவர்களை தூக்கியபடியும் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.