பதிவு செய்த நாள்
10
ஏப்
2020
12:04
திருத்தணி: கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி உள்ளவர்களை, திருத்தணி கோவில் தேவஸ்தான குடில்களில் தனிமைப்படுத்த, திருவள்ளூர் கலெக்டர் தீர்மானித்து, நேற்று நேரில் சென்று, ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும், 13 பேர், கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, தனிமைப்படுத்தி, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி நேற்று, திருத்தணி பஸ் நிலையத்தில் இயங்கி வரும் தற்காலிக காய்கறி மார்க்கெட்டை பார்வையிட்டார். அதை தொடர்ந்து, பஸ் நிலையம் அருகே உள்ள திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான தணிகை குடில் மற்றும் மலைப்பாதை எதிரில் உள்ள கார்த்திகேயன் ஆகிய குடில்களுக்கு நேரில் சென்று குடில்கள் மற்றும் அறைகளை ஆய்வு செய்தார். பின், கலெக்டர் மகேஸ்வரி கூறியதாவது:கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி உள்ளவர்களை, தனிமைப்படுத்துவதற்கு முருகன் கோவில் தேவஸ்தான குடில்கள் சரியாக இருக்குமா என, ஆய்வு செய்தேன்.இங்கு, போதிய வசதிகள் உள்ளதால், தேவஸ்தான குடில்களை தனிமை வார்டுகளாக மாற்றுவதற்கு, அரசுக்கு பரிந்துரை செய்து, அனுமதி கிடைத்தவுடன் அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்படும். அதே போல், திருவள்ளூர் அருகே உள்ள அரசு சட்டக் கல்லுாரியையும், தனிமை வார்டுகளாக பயன்படுத்தப்பட முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது,திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சொர்ணம் அமுதா உட்பட பலர் பங்கேற்றனர்.