பதிவு செய்த நாள்
11
ஏப்
2020
12:04
சென்னை: தேவாலயங்களில் பாதிரியார்கள் மட்டும் பங்கேற்ற, புனித வெள்ளி பிரார்த்தனை நடந்தது. மக்கள் வீடுகளிலேயே பிரார்த்தனை மேற்கொண்டனர்.
நாடு முழுவதும், கொரோனா வைரஸ் பாதிப்பு, நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா தொற்று தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள, மத்திய - மாநில அரசுகள், ஏப்., 14ம் தேதி வரை, ஊரடங்குஉத்தரவு பிறப்பித்துள்ளன.இதையடுத்து, மக்கள் அதிகமாக கூடும் இடங்களான கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும், மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், இயேசு சிலுவையில் அறைப்பட்ட நாளான, புனித வெள்ளி நேற்று அனுசரிக்கப் பட்டது.இந்த நாட்களில், கிறிஸ்துவர்கள், தேவாலயங்களில் சென்று, முழு பிரார்த்தனையில் ஈடுபடுவர். ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், தேவாலயங்களில் பிரார்த்தனைகள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து, சாந்தோம் தேவாலயம் உட்பட, சென்னையில் உள்ள தேவாலயங்களில் நடைபெற்ற பிரார்த்தனையில், பாதிரியார்கள் மட்டுமே பங்கேற்றனர்.இந்த காட்சிகள் சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக ஒளிப்பரப்பப்பட்டது.இதை கிறிஸ்துவ மக்கள் வீட்டில் இருந்தபடியே பார்த்து, புனித வெள்ளியை அனுசரித்து, பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.