பதிவு செய்த நாள்
11
ஏப்
2020
12:04
சாயல்குடி: இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினம் புனித வெள்ளியாக நேற்று காலை கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்பட்டது.கொரோனா பரவுதலை தடுக்க அரசால் ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதால், புனித வெள்ளியை முன்னிட்டு ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், கமுதி, முதுகுளத்துார், சாயல்குடி, சிக்கல், கடலாடி, கீழக்கரை, கன்னிராஜபுரம், மூக்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் சர்ச்சுகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.
சாயல்குடி வி.வி.ஆர்., நகரில் உள்ள சி.எஸ்.ஐ., சர்ச் சபை போதகர் ஜெ.விமல் சந்தோஷ் கூறியதாவது:புனித வெள்ளியை முன்னிட்டு இல்லத்தில் இருந்தபடியே பைபிள்வாசிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. தற்போதைய நவீன தொழில் நுட்பத்தில் வாட்ஸ் ஆப், பேஸ்புக், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் முக்கியமான 7 வசனங்களின் நற்செய்திகளை பதிவிட்டுள்ளோம். இதனை பார்க்கும் கிறிஸ்தவர்கள் வீடுகளில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து தங்களுக்குள் மவுனம், ஜெபம் உள்ளிட்ட பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து அனைவரும் விரைவில் விடுபட வேண்டி, உலக நன்மைக்கான ஜெபம் தினமும் அதிகாலை 5:00 மணிக்கு சர்ச்சுகளில் இறைமக்கள் இன்றி நடக்கிறது, என்றார்.