பதிவு செய்த நாள்
14
ஏப்
2020
02:04
மேட்டுப்பாளையம்: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் கோவில்களில், சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தன.
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சக்தி விநாயகர் கோவிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. கோவில் வளாகத்தில் உள்ள சக்தி விநாயகர், வெள்ளிங்கிரி ஆண்டவர், தேவி கருமாரி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு, புதிய ஆடைகள் அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்பு சிறிது நேரத்தில் கோவில் நடைகள் அடைக்கப்பட்டன. மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது அர்ச்சகர் மட்டும் இதில் பங்கேற்று பூஜை செய்த பின்பு கோவில் நடையை அடைத்தார்.
காரமடை அரங்கநாதர் கோவிலிலும், அரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேகமும், நஞ்சுண்டேஸ்வரர் கோவில் நஞ்சுண்டேஸ்வரர் சுவாமிக்கு, சிறப்பு அலங்கார அபிஷேக பூஜையும் நடந்தது. இதேபோன்று காரமடை, மேட்டுப்பாளையம் பகுதிகளில் உள்ள சிறிய கோவில்களில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவில்களில் பூஜைகள் நடந்தாலும், பக்தர்கள் வழிபாட்டிற்கு யாரையும், விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.