சார்வரி ஆண்டின் ராஜா புதன். புதனின் அதிதேவதையான மகாவிஷ்ணுவை போற்றும் விதத்தில் இந்த வழிபாடு தரப்பட்டுள்ளது. இதை படித்தால் வாழ்வில் நன்மை உண்டாகும்.
* பாற்கடலில் சயன கோலத்தில் இருப்பவரே! பாம்பணையில் துயில்பவரே! காண்பவர் மயங்கும் பேரழகு மிக்கவரே! நாராயண மூர்த்தியே! அச்சுதனே! தாமரைக் கண்களைக் கொண்டவரே! மூவுலகையும் காத்தருள்பவரே! லட்சுமி வசிக்கும் திருமார்பைக் கொண்டவரே! உன் பாதம் பணிந்தோம். எங்களுக்கு செல்வ வளம் தந்தருள்வீராக.
* பிரம்மாவாலும், தேவர்களாலும் வணங்கப்படும் தாமரைப் பாதங்களைக் கொண்டவரே! பாஞ்சஜன்யம் என்னும் சங்கை ஏந்தியவரே! பிரகாசம் மிக்க சக்ராயுதத்தை தாங்கியவரே! கருணைக்கடலே! புண்ணிய மிக்கவரே! கீர்த்தி நிறைந்தவரே! நம்பியவரைக் கரை சேர்ப்பவரே! எங்களுக்கு ஆரோக்கியம் மிக்க நல்வாழ்வு அளிக்க வேண்டும்.
* பத்மநாபரே! கருணைப் பார்வையால் வேண்டும் வரம் தருபவரே! மகாவிஷ்ணுவே! முகுந்தனே! முராரி கிருஷ்ணா! கோபாலா! கோவிந்தா! வாசுதேவா! மங்களகரமான சரீரத்தைக் கொண்டவரே! திருமகளின் மனம் கவர்ந்தவரே! ஆதிசேஷன் மீது துயில்பவரே! எங்கள் குடும்பத்தில் நிம்மதி நிலைக்க அருள்புரிய வேண்டும்.
* பக்தரைக் காப்பவரே! உயிர்களை சம்சாரக் கடலில் இருந்து காப்பவரே! ஆதிமூலமே என அழைத்த யானையின் இடர் தீர்த்தவரே! சாதுக்களின் உளத்தில் வாழ்பவரே! பட்டு பீதாம்பரதாரியே! ரங்கராஜரே! உம் அருட்பார்வையை எங்கள் மீது காட்டியருள வேண்டும்.
* இந்திர நீலமணி போன்ற மேனி வண்ணம் கொண்டவரே! ஸ்ரீரங்கத்தின் காவலரே! ஏழுமலை மீது குடிகொண்டவரே! மதுசூதனரே! கல்யாண குணங்கள் பெற்றவரே! இந்த உலக உயிர்கள் எல்லாம் நலமோடு வாழ அருள்புரிய வேண்டும்.