பதிவு செய்த நாள்
15
ஏப்
2020
02:04
தர்மபுரி: தமிழ் வருட பிறப்பையொட்டி கோவில்களில், நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. தர்மபுரி, கடைவீதி முத்துகாமாட்சியம்மன் கோவிலில், காலை, 6:30 மணிக்கு, அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல், தர்மபுரி அடுத்த அன்னசாகரம் சக்தி மாரியம்மன்கோவில், தர்மபுரி வெளிபேட்டைதெரு அங்காளம்மன் கோவில், நெசவாளர் காலனி சவுடேஸ்வரியம்மன் கோவில், எஸ்.வி.ரோடு அங்காளம்மன் கோவில் உள்பட, தர்மபுரியில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில், நேற்று சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடந்தன.
கொரோனாவால் வெறிச்: கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை - சென்னை சாலையில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. இதே போன்று கிருஷ்ணகிரி சப் - ஜெயில் சாலையில் உள்ள சித்தி விநாயகர் கோவில், ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோவில், காந்திசாலையில் உள்ள வரசித்தி விநாயகர் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலை, நகராட்சி ஆணையாளர் சந்திரா ரோந்து சென்றார். அப்போது புதுப்பேட்டையில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில், ஓரிருவர் மட்டுமே சுவாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர். கூட்டம் சேராமல் பார்த்துக் கொள்ள பூசாரிக்கு ஆணையாளர் அறிவுறுத்தினார். வழக்கமாக தமிழ் புத்தாண்டிற்கு ஏராளமானோர் அதிகாலை முதலே கோவில்களில் சுவாமி தரிசனத்துக்கு வருவர். தற்போது, ஊரடங்கு உத்தரவால் கோவில்களில் பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடியது.