பதிவு செய்த நாள்
18
ஏப்
2020
09:04
மதுரை:கொரோனா ஊரடங்கால், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. திருக்கல்யாணம் மட்டும், இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
மதுரை சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. இந்தாண்டு திருவிழா, ஏப்., 25ல் கொடியேற்றத்துடன் துவங்க இருந்தது. கொரோனா ஊரடங்கால், விழாவை ரத்து செய்து அறநிலையத் துறை உத்தரவிட்டு உள்ளது. இதன்படி, மே, 2ல் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், மே, 3ல் திக்விஜயம், மே, 4ல் திருக்கல்யாணம், மே, 5ல் தேரோட்டம் உள்ளிட்ட அனைத்து விழாக்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.மே, 7ல் கள்ளழகர், வைகை ஆற்றில் எழுந்தருளும் விழாவும் ரத்து ஆகிறது. கோவில் வரலாற்றிலேயே, முதல் முறையாக, திருவிழா ரத்து ஆவது, பக்தர்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனர், நடராஜன் கூறியதாவது:திருக்கல்யாண சம்பிரதாயங்கள் மட்டும் தினமும் நடைபெறும். நித்ய பூஜைகளுடன் சேர்த்து, மே, 4 காலை, 9:05 முதல் 9:29 மணிக்குள், நான்கு சிவாச்சாரியார்கள் மட்டும் திருக்கல்யாணத்தை நடத்துவர். இந்நிகழ்வு, www.maduraimeenakshi.org இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார். இதேபோல, உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலிலும், நடப்பாண்டு சித்திரை திருவிழா ரத்து செய்யப்படுவதாக, அறநிலையத் துறை சார்பில், நேற்று அறிவிக்கப்பட்டு உள்ளது.