பதிவு செய்த நாள்
17
ஏப்
2020
04:04
கோவில் திருவிழாக்கள் நடக்காததால், கணியான் கூத்து நடத்தும், நாட்டுப் புற கலைஞர்களின், வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு உதவ வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், கணியான் கூத்து மிகவும் பிரபலம். இக்கலைஞர்கள், மகுடம் என்ற இசைக் கருவியை இசைத்தபடி, இக்கூத்தை நிகழ்த்துவதால், மகுடாட்டம் என்றும் அழைக்கப்படும். தென் மாவட்டங்களில், கோடை காலங்களில், அனைத்து கோவில்களிலும், கொடை விழாக்கள் நடத்தப்படும். இவ்விழாவில், கணியான் கூத்து இடம்பெறும்.
அரசுக்கு கோரிக்கை: இதில், ஏழு கலைஞர்கள் பங்கேற்பர். ஆண்கள் மட்டுமே, இக்கூத்தை நிகழ்த்துவர். இருவர் பெண் வேடமிட்டு, கதைப் பாடல், மகுடம் இசைக்கேற்ப சுழன்றுஆடுவர்.அம்மன் கதை, சுடலைமாடன் கதை, அரிச்சந்திரன் கதை, ராமாயணம் போன்றவற்றை, இசையுடன் எடுத்துரைப்பர். மக்கள் விடிய விடிய அமர்ந்து ரசிப்பர்.
கணியான் கூத்து நடத்தும், நாட்டுப்புற கலைஞர்களுக்கு, பங்குனி மாதத்தில் இருந்து, ஆவணி மாதம் வரை, ஆறு மாதங்கள், தொழில் இருக்கும். அதன்பின், வேலை இருக்காது. ஆறு மாதங்களில், அவர்கள் சம்பாதிப் பதை வைத்து, ஆண்டு முழுதும் வாழ்க்கையை நடத்துவர். தொழில் இல்லாத காலங்களில், கதைகளை உருவாக்கி, பயிற்சி பெறுவர். கோவில் விழா நடக்கும், மூன்று நாட்களுக்கு, ஏழு பேருக்கும் சேர்த்து, 30 ஆயிரம் ரூபாய் பெறுவர். தற்போது, ஊரடங்கால் கோவில் திருவிழாக்களுக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கணியான் கூத்து கலைஞர்கள், வீட்டிற்குள் முடங்கிஉள்ளனர். இந்த ஆண்டு முழுதும், தொழில் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தங்களுக்கு, நிவாரண உதவி வழங்க வேண்டும் என, கணியான் கூத்து கலைஞர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேவையான உதவி: இது குறித்து, திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லுார் கிராமத்தை சேர்ந்த, கணியான் கூத்து கலைஞர், ராமதாஸ் கூறியதாவது:நாங்கள், பழங்குடியினர்
வகுப்பை சேர்ந்தவர்கள். கணியான் கூத்தை, 1,700 குடும்பத்தினர் நடத்தி வருகிறோம். எங்களுக்கு கூத்து தவிர, வேறு எதுவும் தெரியாது. எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது; சாப்பாட்டுக்கே சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில், எங்களில் பெரும்பாலானோர் பதிவு செய்ய வில்லை. இதனால், அரசு அறிவிக்கும் நிவாரணமும் கிடைக்காத நிலை உள்ளது. எனவே, நல வாரியத்தில் பதிவு செய்யாதவர்களை கணக்கெடுத்து, தேவையான உதவிகளை செய்ய, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார். - நமது நிருபர்-