பதிவு செய்த நாள்
18
ஏப்
2020
10:04
திருப்பதி : கொரோனா மருத்துவ சிகிச்சைக்கு தேவையான, மருத்துவ உபகரணங்கள் வாங்க, திருமலை திருப்பதி தேவஸ்தானம், இதுவரை, 20 கோடி ரூபாயை, சித்துார் மாவட்ட கலெக்டரிடம் வழங்கி உள்ளதாக, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்தார்.
ஆந்திரா மாநிலம், திருச்சானுாரில் உள்ள பத்மாவதி மருத்துவமனையில் நேற்று காலை ஆய்வு மேற்கொண்ட அவர், மேலும் கூறியதாவது:கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ள, திருச்சானுார் பத்மாவதி மருத்துவமனையில், தற்போது, 390 படுக்கை வசதிகளும், 110 வென்டிலேட்டர்களும் பயன்பாட்டில் உள்ளன.படுக்கை வசதியை, இன்னும் இரண்டு நாட்களில், 500 ஆக உயர்த்த, மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 100 வென்டிலேட்டர்களை, தயார் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைக்கு தேவைப்படும், மருத்துவ உபகரணங்கள் வாங்க, தேவஸ்தானம், இதுவரை சித்துார் மாவட்ட நிர்வாகத்திற்கு, 20 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, தினசரி, 1.40 லட்சம் என இதுவரை, 26 லட்சம் உணவு பொட்டலங்களை, ஆதரவற்றோருக்கு வழங்கியுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.