பதிவு செய்த நாள்
18
ஏப்
2020
10:04
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், இந்தாண்டு சித்திரை வசந்த உற்சவம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், சித்திரை வசந்த உற்வசம் நடக்கும், அதன்படி, இந்தாண்டு வரும், 26ல், தொடங்கி, மே, 6 வரை, 10 நாட்கள் நடைபெறுவதாக இருந்தது. இந்த நாட்களில் கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். விழாவின் நிறைவு நாளான்று மன்மத தகனம் எனும் நிகழ்ச்சி நடக்கும். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால், இந்தாண்டு சித்திரை வசந்த உற்சவம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் தெரிவித்துள்ளதாவது: சித்திரை வசந்த உற்சவம் நடத்துவதற்கு, சிவாச்சாரியார்கள் மட்டுமின்றி கோவில் ஊழியர்கள் உள்ளிட்ட பக்தர்களின் பங்கேற்பு அவசியமானது. ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் சித்திரை வசந்த உற்சவம் நடத்துவதை தவிர்த்து இருக்கிறோம். ஆனாலும், சித்திரை வசந்த உற்சவம் நடைபெறும், 10 நாட்களும் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் வழக்கம்போல் நடக்கும். ஆனால், பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.