பதிவு செய்த நாள்
19
ஏப்
2020
12:04
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கிராமப்பகுதிகளில், அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பு இல்லாததால், ஊரடங்கு தளர்ந்து, விதிமுறைகள் மீறப்படுகிறது. கோவில்களை திறந்து பக்தர்கள் வழிபாடு நடக்கிறது. கொரோனா பரவலின் வீரியம் மற்றும் ஆபத்தின் தன்மை உணர்ந்து, மக்களை காக்க அரசு ஊரடங்கு அறிவித்துள்ளது.
நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியுள்ளது.மிக அத்தியாவசிய தேவைகள் தவிர, வேறு எதற்கும் வெளியில் வரக்கூடாது, பொது இடங்களில் கூட்டம் கூடக்கூடாது, தனி நபர் இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. இதை நடைமுறைப்படுத்த, போலீசார் இரவு பகலாக பாடுபடுகின்றனர். ஆனால், மக்களில் பெரும்பாலானவர்கள், ஆபத்தை உணராமல் நடந்து கொள்கின்றனர். பொள்ளாச்சி நகரில் விதிமுறைகள் கறாராக கடைப்பிடிக்கப்படுகின்றன. புறநகர், கிராமங்களில் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பு இல்லாததாலும், போலீசார் ரோந்து செல்லாததாலும் ஊரடங்கு தளரத்துவங்கியுள்ளது. அரசு உத்தரவுக்கு புறம்பாக, கோவில்களை திறந்து பக்தர்கள் வழிபாடு நடக்கிறது. பொள்ளாச்சி, மாக்கினாம்பட்டி மாரியம்மன் கோவில் திறக்கப்பட்டு, மக்கள் வழிபாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிராம டீக்கடைகளில், முகக்கவசம் அணியாமல், சமூக விலகல் இல்லாமல் இருக்கின்றனர்.உள்ளாட்சி நிர்வாகங்கங்கள் இதற்கு பொறுப்பேற்று, ஊரடங்கை கிராமங்களிலும் முறையாக கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.