பதிவு செய்த நாள்
21
ஏப்
2020
01:04
திருப்பதி: கொரோனா நோய் தொற்று காரணமாக, ஏழுமலையான் தரிசனத்தில் புதிய வழிமுறைகளை கடைபிடிக்க திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கொரோனா நோய் தொற்று நடவடிக்கைகளுக்காக, நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால், திருமலை திருப்பதி தேவஸ்தானமும் திருமலை மலைபாதைகளை கடந்த மார்ச்.18ம் தேதி முதல் மூடியது. தேவஸ்தான ஊழியர்களும், வாரத்திற்கு ஒருமுறை சுழற்சி முறையில் பணியாற்ற தேவஸ்தானம் அனுமதித்து வருகிறது. ஆனால், ஏழுமலையானுக்கு நடக்கும் கைங்கரியங்கள் மட்டும் எவ்வித குறைவும் இல்லாமல் நடந்து வருகிறது.
இந்நிலையில், மே.3ம் தேதி வரை ஊரடங்கு உள்ள நிலையில், தேவஸ்தானமும் ஏழுமலையான் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கும் தேதியை நீட்டித்துள்ளது. மேலும், மார்ச்.13ம் தேதி முதல் மே.31ம் தேதி வரை பக்தர்கள் முன்பதிவு செய்த ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள், இதர தரிசன டிக்கெட்டுகளை ரத்து செய்து பக்தர்களுக்கு அதற்கான கட்டணத்தை திருப்பி அளித்து வருகிறது. மே.3ம் தேதி வரை மட்டுமே ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேவஸ்தானம் மே.31ம் தேதி வரை அனைத்து தரிசனங்களை ரத்து செய்துள்ளது. ஊரடங்கு திரும்ப பெறப்பட்டாலும், ஏழுமலையான் தரிசனத்தில் சில புதிய வழிமுறைகளை கையாள தேவஸ்தானம் திட்டமிட்டு உள்ளது. அதில் ஒருபாகமாக, 20 ஆயிரம் பேருக்கு மட்டும் ஏழுமலையான் தரிசனம் வழங்க முடிவு செய்துள்ளது. திருமலையில் வாடகை அறை அளிப்பதை ஊரடங்கிற்கு பின்பும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உள்ளது.
தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் கண்டிப்பாக, 3 அடி துாரம் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தப்பட உள்ளது. உலக அளவிலிருந்து பக்தர்கள் திருமலைக்கு வருவதால், இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். திருமலையில் பக்தர்களை தங்க வைப்பதை தவிர்ப்பதன் மூலம் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என அவர்கள் கருதுகின்றனர். எனவே, விரைவில் இதுகுறித்த அதிகார பூர்வ அறிவிப்பை தேவஸ்தானம் வெளியிட உள்ளது.