பதிவு செய்த நாள்
08
மே
2012
10:05
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் அமைந்துள்ளது. இப்பேராலயத்துக்கு அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தை போலவே கிறிஸ்தவர்கள் திரளாக வருகின்றனர். இந்த ஆலயத்தில் ஏசு சுமந்த சிலுவையின் ஒரு பகுதியும் வைக்கப்பட்டுள்ளது சிறப்புக்குரியதாகும். ஆண்டுதோறும் பூண்டி மாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழ வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதேபோல, நடப்பாண்டும் ஆண்டு பெருவிழா கடந்த ஆறாம்தேதி மாலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் துவக்கமாக மாதா உருவம் பொறித்த கொடியை கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். அப்போது பிரார்த்தனை பாடல்களை மனமுருக பாடியபடியே திரளாக கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து குடந்தை ஆயர் அந்தோணிசாமி, மறைமாவட்ட முதன்மை குரு ஜான் பன்னீர்செல்வம், பேராலய அதிபர் செபாஸ்டின், துணை அதிபர் அருள்சாமி உள்ளிட்ட பங்கு குருக்கள் ஊர்வலமாக கொடி மேடை அருகே அழைத்து வரப்பட்டனர். பின்னர், குடந்தை ஆயர் அந்தோணிசாமி புனிதம் செய்து கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து, திருவிழா துவக்கமாக ஆயர் அந்தோணிசாமி தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது. திருச்சி-தஞ்சை நான்கு ரோட்டிலுள்ள செங்கிப்பட்டி அருகே கோவிலுக்கு வரும் பாதையில் புதிதாக மாதா கெபி அமைக்க ஆயர் புனிதம் செய்து, துவக்கி வைத்தார். திருப்பலி நிறைவில்,"பூண்டி தாயே என்னும் தலைப்பில் தயாரிக்கப்பட்ட "சிடியை ஆயர் அந்தோணிசாமி வெளியிட்டார். வரும் 14ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் நல நாளாக கருதி, தினமும் மாலையில் சிறு சப்பர தேர் பவனியும், சிறப்பு திருப்பலியும் நடத்தப்படும். இவ்விழாவின் சிறப்பம்சமாக 14ம் தேதி இரவு அலங்கார தேர்பவனி நடத்தப்படும் என, அதிபர் செபாஸ்டின் தெரிவித்தார். ஏற்பாடுகளை பேராலய அதிபர் செபாஸ்டின், துணை அதிபர் ஆஸ்டின் பீட்டர், உதவி பங்கு தந்தை அமைதியரசு, ஆன்மீக தந்தை சூசை மாணிக்கம் மற்றும் பங்கு மக்கள் பணியாளர்கள் செய்திருந்தனர்.